தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கடம்பூர் சாலையில், கடம்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரீஸ்வரன் மற்றும் வினோத் குமார் ஓட்டிய மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரீஸ்வரன் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூரை சேர்ந்த காந்தி என்பவரின் மகன் மாரீஸ்வரன் (வயது 27), ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு கடம்பூரில் இருந்து கயத்தாறுக்கு மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் இந்திரா நகர் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் வினோத் குமார் (29) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
கயத்தாறு-கடம்பூர் சாலையில் வடக்கு சுப்பிர மணியபுரம் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மாரீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் வினோத்குமாரின் ஒரு கால் முறிவு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான மாரீஸ்வரனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து பேசி முடித்துள்ளனர்.