மேலூரில் தீபாவளி நாளில் இரண்டு விபத்துகளில் 4 பேர் பலியானது பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.
மதுரை அருகேயுள்ள உத்தங்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். லோகேஷ் பெற்றோருடன் தீபாவளியை கொண்டாட நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர்கள் இருவரும் நேற்று காலை தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு புலிப்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அழகர்கோவில் சாலையில் சென்றபோது, அய்யர்பட்டி அருகே எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் அதிக வேகத்தில் வந்தது. அதில் சண்முக நாதபுரத்தைச் சேர்ந்த நவீன் குமார் (22) என்பவர் வந்தார். இதில் அங்குள்ள ஆபத்தான ஒரு வளையில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் தந்தை, மகன் உள்பட மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். உடனடியாக விபத்து குறித்து யாரும் அறிந்திருக்காததால் சிறிது நேரத்திலேயே அவர்கள் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக் குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மற்றொரு விபத்தில் ஒருவர் பலியானார். மேலூர் அருகேயுள்ள மேளவளவை சேர்ந்தவர் செந்தில் குமார் (36). இவரது உறவினர் சண்முகம் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். சண்முகம் பின்னால் அமர்ந்து சென்றார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் பல்லவராயன் பட்டியை சேர்த்த கண்ணன் எதிரே வந்தார். அப்போது பழைய சுக்காம்பட்டி கேட்டு கடை அருகே சென்ற போது இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய செந்தில் குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலூரில் தீபாவளி நாளில் இரண்டு விபத்துகளில் நான்கு பேர் பலியானது பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.