தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குளத்தில் குதித்து தாய்-மகள் தற்கொலை

இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.

Suresh K Jangir

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

மழைநீர் மூலம் இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வருடத்தில் பெரும்பாலான நாட்களில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்த குளத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் இந்த குளத்தில் குளிக்க செல்வோர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி இறப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் திருமுக்குளத்துக்கு சென்றனர். அப்போது தண்ணீரில் 2 பெண்களின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 2 பெண்களின் உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தாய்-மகளா? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இறந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டி தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி மகாலட்சுமி (வயது 50), அவரது மகள் அங்காள ஈஸ்வரி (14) என தெரிய வந்தது. இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.