தமிழக செய்திகள்

மணி மியூல் மோசடி - 48 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது!

48 மணிநேரத்தில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ரூ. 545.27 கோடி அளவிலான “மணி மியூல்” ஆன்லைன் வங்கி கணக்கு மோசடி தொடர்பாக, 48 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆக.6 மற்றும் 7 என இருநாட்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில் இந்த மாபெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட 601 வழக்குகளுடன் மேலும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப்கள் மற்றும் ரூ.1.02 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைக்காக 155 மொபைல் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

"மணி மியூல்" மோசடி என்றால் என்ன?

சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை ஏமாற்றிப் பெறும் சட்டவிரோதப் பணத்தை, நேரடியாகத் தங்களின் சொந்தக் கணக்கிற்கு மாற்ற மாட்டார்கள். அதற்குப் பதிலாக, மற்ற நபர்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கோ அல்லது கமிஷன் தொகை கொடுத்தோ பெற்று, அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து பணத்தை முறைகேடாகப் பிரித்து எடுப்பார்கள்.

இவ்வாறு பயன்படுத்தப்படும் கணக்குகளே 'மியூல் கணக்குகள்' எனப்படுகின்றன.

கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டுகள் அல்லது செக் புத்தகங்களை மற்றவர்களிடம் பகிரவோ, விற்கவோ வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.