தமிழக செய்திகள்

அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது!

இந்த விவகாரம் தொடர்பாக பொது நூலகத் துறையின் 5 மூத்த அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் மோசடி வழக்கில், அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், கைது செய்துள்ளனர்.

வழக்கின் பின்னணி

திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம்.

திறந்து வைக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள்ளேயே, இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் வெடித்தது.

இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தவர், புத்தகங்களை வாங்க அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகன். இவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் இந்த உண்மைகள் வெளிவந்தன.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை கொண்ட புத்தக்கங்கள் வாங்கி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகார் வெடித்த உடனேயே திமுகவும், தவெகவும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டன.

இதனிடையே இந்த போலி புத்தக்கங்கள் அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் என்ற இரு பதிப்பகங்களை சேர்ந்தவை என கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த விவாகரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த இரு பதிப்பகங்களும், சென்னை மடிப்பாக்கம், பிரம்மபுத்திரா தெருவில் ஒரே முகவரியில் செயல்படுவதும், இரு பதிப்பகங்களுக்கும், மோகன் என்பவரே உரிமையாளர் என்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பதிப்பக உரிமையாளர் மோகனின் வீடு, கோவை பெரியார் அறிவுலகம், தென்காசி நூலகம் உள்ளிட்ட 7 இடங்களில் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT