தமிழக செய்திகள்

TN Election 2026 | இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் முரட்டு பக்தர்களைப் பார்த்திருக்கிறீர்கள், முரட்டுத் தொண்டர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா முரட்டு அடிமையை? என எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டடார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணன் பெரியகருப்பனை சென்ற தேர்தலில் 37,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து சட்டபேரவைக்கு அனுப்பினீர்கள். இந்த முறை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து அனுப்ப வேண்டும்.

திருப்பத்தூர் - மேலூர் வரை நான்கு வழிச் சாலைப் பணிகள் இன்று 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது.

சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு இன்று கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுகிறது என்றால் அது அண்ணனின் முயற்சியில் நடந்திருக்கிறது.

திருப்பத்தூரில் காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளத்தூர் பகுதியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவலர் குடியிருப்ப்புப் பணிகள் அண்ணன் அவர்கள் முயற்சியில் வந்திருக்கின்றன.

சிங்கம்புணரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்கு அண்ணனின் முயற்சியில் வந்திருக்கிறது.

16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகங்கள், ஆய்வாளர் அலுவலகங்கள், சிங்கம்புணரி மற்றும் புழுதிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

கோட்டையூரில் அண்ணன் பெரியகருப்பன் அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் விளையாட்டுத் துறை சார்பாக ஒரு நவீன கால்பந்து மைதானம் கேட்டார், உடனே செய்து கொடுத்துவிட்டோம். அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குப் பல தோல்விகளைக் கொடுத்திருக்கிறோம், 10 தோல்விகளைக் கொடுத்திருக்கிறோம். இந்தத் தேர்தலோடு 10 தோல்வி பழனிசாமியை மொத்தத் தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இந்தச் சட்டமன்றத் தேர்தல்.

நீங்கள் முரட்டு பக்தர்களைப் பார்த்திருக்கிறீர்கள், முரட்டுத் தொண்டர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா முரட்டு அடிமையை? இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான்.

‘ஜாடிக்கேற்ற மூடி’ என்று சொல்வார்கள், அது மாதிரி இன்று மோடிக்கேற்ற ஒரு எடப்பாடி பழனிசாமிதான் இங்கே எதிர்க்கட்சித் தலைவராக அமைந்திருக்கிறார். அவர்கள் இரண்டு பேரையும் மீண்டும் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாசிசக் கூட்டத்துக்கு, சங்கிக் கூட்டத்துக்கு இடமில்லை என்று அனுப்ப வேண்டிய தேர்தல் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்.