தமிழக செய்திகள்

சென்னை ரெயிலில் வெடித்து சிதறிய செல்போன் பவர் பேங்க்: அலறியடித்த பயணிகள்

ரெயிலை நிறுத்தி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று இரவு பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

அந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி அருகே இரவு 10.40 மணிக்கு வந்து கொண்டு இருந்தது.

அப்போது பொதுப்பெட்டியில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனை பவர் பேங்கில் சார்ஜ் போட்டார். பவர் பேங்க் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இரவு நேரம் என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இதுகுறித்து பயணிகள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயிலை நிறுத்தி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

செல்போன் சார்ஜர் பவர் பேங்க் வெடித்ததில் யாருக்கும் காயமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இதையடுத்து சிறிது நேர இடைவெளிக்கு பிறகு ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT