தமிழக செய்திகள்

இளைஞர்களுக்கு அரசு நிர்வாகப் பயிற்சி: 'KGF' திட்டத்தைத் தொடங்கி வைத்தார் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்

ஒரு குடிமகனாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு, பொதுப் பிரச்சனைகள் குறித்த புரிதல் மற்றும் மக்கள் சேவையில் இளைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

காமராஜர் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட KGF திட்டம், அப்துல் கலாம் பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. இளைஞர்கள் அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதியின் பணிகள், சமூகப் பொறுப்புகள் குறித்து நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆறு மாத பயிற்சியில், அரசின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளை அணுகும் முறைகள் குறித்து அனுபவம் பெறுவர்.

காமராஜர் பிறந்தநாளில் அறிவிப்பு; அப்துல் கலாம் பிறந்தநாளில் தொடக்கம்!

இளைஞர்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளவும், மக்கள் பிரதிநிதியின் பணிகள் மற்றும் சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முன்னெடுத்துள்ள KGF (Kavundampalayam Governance Fellowship) திட்டம் இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

முன்னதாக, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அப்துல் கலாமின் பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாத காலப் பயிற்சித் திட்டம்!

KGF திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், ஆறு மாத காலம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷுடன் இணைந்து பயணித்து, மக்கள் பிரதிநிதியின் அன்றாடப் பணிகள், தொகுதி மக்களின் கோரிக்கைகள், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள உள்ளனர்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள் (ID Cards) மற்றும் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் (Offer Letters) இன்று வழங்கப்பட்டன. இந்த ஆறு மாத காலப் பயிற்சியின் வாயிலாக, அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, பொதுமக்களின் பிரச்சனைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன, அவற்றுக்கான தீர்வுகளைப் பெறுவதில் மக்கள் பிரதிநிதியின் பங்கு என்ன என்பன போன்றவற்றை இளைஞர்கள் நடைமுறை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

மேலும், ஒரு குடிமகனாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு, பொதுப் பிரச்சனைகள் குறித்த புரிதல் மற்றும் மக்கள் சேவையில் இளைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இளைஞர்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:-

“டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், நிறைய கனவுகளுடனும் சமூகத்தின் மீது அக்கறையுடனும் வந்திருக்கும் இளைஞர்களுடன் இணைந்து பயணிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ஆறு மாத காலப் பயிற்சி, தமிழகத்தில் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், மக்கள் பிரதிநிதியின் பணிகள் என்ன என்பதையும் இளைஞர்கள் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

ஒரு குடிமகனாக நமக்கு என்னென்ன சமூகப் பொறுப்புகள் உள்ளன என்பதையும், சமூகத்தின் வளர்ச்சியில் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இளைஞர்களிடம் ஏராளமான கனவுகளும் புதிய சிந்தனைகளும் உள்ளன.

அவர்களுடைய கருத்துகளையும் அணுகுமுறைகளையும் அறிந்துகொள்வதுடன், அவர்களிடமிருந்தும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆறு மாதப் பயிற்சி அவர்களின் எதிர்காலத்திற்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக அமையட்டும்.”

இவ்வாறு கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT