தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய இபிஎஸ்,
“தேனி மாவட்டத்துக்கு தனி வரலாறு உண்டு, இரண்டு முதலமைச்சர்களை கண்ட மாவட்டம். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீண்டும் தேனி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள். தேனி என்றாலே முல்லைப் பெரியாறு அணை. வேண்டும் என்பதுதான் அதிமுக லட்சியம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும்,
முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி அணை பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்குப் பிறகு அணையின் இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. வழக்குப்போட்டு இடையூறு செய்தது.
அணையை பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், நான் கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்துப் பேசினேன். அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய முதலமைச்சர் இதை கண்டுக்கொள்ளவே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியோடு திமுக கூட்டணியில் உள்ளது, முதலமைச்சர் ஸ்டாலின் கேரளா சென்று அம்மாநில முதலமைச்சரை பார்க்கவில்லை. அவரை சந்தித்துப் பேசியிருந்தால் 152 அடியாக உயர்த்தியிருக்கலாம். அப்படி செய்தாரா..?
அவர் நினைத்திருந்தால் விவசாயிகள் பிரச்னைகளை பேசி தீர்வு கண்டிருக்கலாம். கேரளா பக்கத்தில் ஒரு அணை கட்டுவதாகக் குறிப்பிட்டனர், அதிமுக அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டாலின் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
5 மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அளவை உயர்த்தியிருக்கலாம்.
தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு இந்தி எதிர்ப்பு, மொழிக் கொள்கை, மாநில உரிமை எல்லாமே ஞாபகம் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.
இந்தியை திணித்தது காங்கிரஸ். இப்போது அந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறார்கள். பச்சோந்தி கூட கொஞ்சநேரம் கழித்துத்தான் நிறம் மாறும், ஆனால் உடனுக்குடன் நிறம் மாறுவார் முதலமைச்சர் ஸ்டாலின்” என தெரிவித்தார்.