சட்டசபை தேர்தலுக்கு பின் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கோவை வருகை தர உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்ட பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.
பெரியார் அறிவுலகம் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டத் தொடங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த நூலகத்துக்கு பெரியார் அறிவுலகம் என்ற பெயரையும் சூட்டினார். பணிகள் முழுவதும் முடிவு பெறாததால் அப்போது நூலகம் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில் கோவைக்கு பிரமாண்ட நூலகம் தந்ததுடன், அதற்கு பெரியார் பெயர் வைத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை (4-ந் தேதி) பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. கோவை வ.உ.சி. மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் நீலாம்பூர் செல்கிறார். அங்கு ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன்பின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
பாராட்டு விழாவை ஒட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை அவினாசி சாலையின் இருபுறமும் தி.மு.க. மற்றும் திராவிடர் கழக கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பின் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக கோவை வருகை தர உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். இதனால் பாராட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்று மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.