மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்மாற்றிக் கோளாறுகள் தாமதமாவதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது.
பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இரவில் வீட்டிற்கு வந்தால் மின் வெட்டு என்ற நிலை சென்னை மற்றும் புறநகர் மக்களை குமுற வைத்துள்ளது.
இரவில் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல், மின்வாரியத்தை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.
மின்தடை தொடர்பாக பொதுமக்கள் "மின்னகம்" மையத்திற்கு தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பை சரி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்மாற்றி பழுது காரணமாக ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.