தமிழக செய்திகள்

என்னையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருவண்ணாமலை என்றால் திமுக மலை என்பதுபோல் இங்கு திமுக வலிமையாக உள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 12 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திருவண்ணாமலையையும் தீபத்தையும் பிரிக்க முடியுமா? என்னையும் தி.மலையையும் பிரிக்க முடியாது.

தி.மு.க.வின் கோட்டை திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் திமுக மலை என்பது போல் இங்கு திமுக வலிமையாக உள்ளது.

திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை மாநகராட்சியானது; உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். திமுக ஆட்சியில் 12 தொகுதிகளுக்கு செய்த சாதனைகளைச் சொல்ல நேரம் போதாது.

வேதனைகள் நிரம்பியதுதான் பழனிசாமியின் ஆட்சி; மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிட்டு பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சுய மரியாதையும் கிடையாது, தமிழ் உணர்வும் கிடையாது.

தி.மு.க. அரசு இந்து விரோத அரசு என்று பா.ஜ.க. கூறும் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள். ரூ.8,000 கூப்பன் எனும் இல்லத்தரசி திட்டத்தை சூப்பர் ஸ்டாராக தேர்தல் களத்தில் இறக்கியுள்ளேன். இந்தியாவுக்கே மாடலாக இருக்கிறது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.

மகளிருக்காக இன்னும் நிறைய திட்டங்களை செய்வேன். திராவிட மாடல் அரசுக்கு இருக்கும் எழுச்சியை பார்த்து எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கிளைக் கழகமாக மாறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நேர்மை கேள்விக்குறியாகி உள்ளது. பா.ஜ.க.வின் தலையீட்டால் தமிழ்நாட்டின் உயரதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திராவிட மாடல் அரசுதான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.