தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பா.ஜ.க.வின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் த.வெ.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
டெல்லியில் இன்று அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.
டெல்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பா.ஜ.க.வின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் த.வெ.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அமைதிவழியில் போராடுவதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.