முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளி செங்கோல் வழங்கிய விக்கிரமராஜா 
தமிழக செய்திகள்

திருச்சியில் 5 லட்சம் பேர் திரண்டனர்... வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய முதன்மை துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

மாலை மலர்

திருச்சி:

தமிழகம் முழுவதும் மே மாதம் 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சங்கங்கள் சார்பில் மாநாடு, பேரணி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று தமிழக வணிகர் விடியல் மாநாடு நடைபெற்றது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் மாநாடு நடைபெற்றது. வழிநெடுகிலும் பேரமைப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

காலை 8.30 மணியளவில் திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம் தலைமையில் மாநாட்டு பந்தலில் பேரமைப்பு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி, மக்கள் இசை நிகழ்ச்சி, குத்துவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. பின்னர் மாநாடு தொடங்கியது.

மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய முதன்மை துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு வரவேற்றார்.

மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் மண்டல தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாடு தீர்மானங்களை பிரகடனம் செய்தார்.

அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர்.

அதனைத்தொடர்ந்து மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவரை விக்கிரமராஜா வரவேற்று கவுரவித்தார். பின்னர் அவர் முதுபெரும் வணிகர்களுக்கு வ.உ.சி. வணிக செம்மல் விருதுகள் மற்றும் நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவாக கல்வி ஊக்கத்தொகையினை வழங்கி பேசினார். அப்போது அவர் வணிகர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.மூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேயர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் திருச்சி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி ஆகியோர் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டில் எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மண்டல தலைவர்கள் வைத்திலிங்கம், ஜோதிலிங்கம், செந்தில்நாதன், ராதாகிருஷ்ணன், செல்லமுத்து, வைகுண்டராஜா, நிர்வாகிகள் மணி, சம்பத்குமார், காளிதாசன், ராஜசேகரன், சண்முக நாதன், மகேந்திரவேல், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் எஸ். கந்தன், ரெங்கவிலாஸ் ரெங்கநாதன், கே.எம்.எஸ்.ஹக்கீம்,எஸ்.ஆர்.வி.கண்ணன், மாநில இணை செயலாளர் டி.ராஜாங்கம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், காட்டூர் வியாபாரிகள் கூட்டமைப்பு செயலாளரும் திருச்சி மாவட்ட செயலாளருமான செந்தில்பாலு, காட்டூர் வியாபாரிகள் கூட்டமைப்பு பொருளாளர் மணிவேல்,

பல்வேறு மாநில வணிகர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அனைத்து தொழில் வணிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், சென்னை பழைய பொருள் வியாபாரிகள் சங்க நிர் வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகளும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் திரண்டனர்.

மாநாட்டையொட்டி இன்று வியாபாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கப்பட்டது.

முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்பப்பட்டிருந்தன. மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவை சாப்பிட்டார். பின்னர் மதியம் 2.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.