தமிழக செய்திகள்

TN Assembly Election | தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இன்று மு.க.ஸ்டாலின் நேர்காணல்

தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

மாலை மலர்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதேபோல் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, கட்சி தலைமை அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

அவ்வாறு தாக்கல் செய்திருந்தவர்களை நேரில் அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தி, அதில் தகுதிவாய்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதை தி.மு.க. வழக்கமாக கொண்டிருக்கிறது.

அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் தொடங்கியது. முதலில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக விருப்பமனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ச்சியாக 19, 20, 21 மற்றும் 22-ந்தேதிகளிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.