தமிழக செய்திகள்

உங்களை மீண்டும் களத்தில் காணும் ஆவல் - எம்.எஸ்.தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

எம்.எஸ்.தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் தோனியை "தமிழகம் தத்தெடுத்துக்கொண்ட மகன்" மற்றும் "சென்னையின் செல்லப்பிள்ளை" என்று அன்போடு அழைத்துள்ளார். தோனியின் பிறந்தநாளுக்கு ஆண்டுதோறும் தனது எக்ஸ் தள பக்கத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று பிறந்தநாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் எம்.எஸ்.தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ, உங்கள் நிதானம், தலைமைத்துவம் மற்றும் என்றும் குறையாத ஈர்ப்புத்திறன் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. உங்களை மீண்டும் களத்தில் காணும் ஆவல் எப்போதும் போலவே இப்போதும் வலுவாக உள்ளது.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.