இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள், ''நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்'' என்ற பாடல் பாடி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.