காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, பூசிவாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கனமழையால், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் ரெயில் வழித்தடத்தில் பூசிவாக்கம் அருகே உள்ள எல்.சி.-21 பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் மண் சரிந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்சரிவு குறித்து காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம் வந்த ரெயில்கள் வாலாஜாபாத் ரெயில் நிலையத்திலும், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரெயில்கள் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்தது. காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை அரக்கோணம் நோக்கி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சென்னைக்கு செல்ல மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது.
மண்சரிவு காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 3 ரெயில்களும், திருமால்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டிய ஒரு ரெயில் என மொத்தம் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே பணியாளர்கள் சீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாளத்தை ஒட்டிய மண்சரிவை அகற்றி, ரெயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.