மக்கள் 8 முழ வேஷ்டிக்கு பதிலாக 4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசியதாவது :-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைத்துள்ளது.
நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு கலைஞர் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார் என வரலாற்றைச் சுட்டிக்காட்டினார்.
ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசின் புதிய முடிவால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நெசவாளர்களின் உண்மை நிலை மற்றும் பாதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டின் தெரிவித்தார். பயனாளிகளிடமோ அல்லது நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமோ முறையான அறிவிப்பு கொடுத்துக் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளால் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் 'ஃபார்மாலிட்டி'க்காக மட்டுமே கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகப் பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டு, இருப்பில் தேங்கியுள்ளன. நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளன.
புதிய அரசாணையின்படி 60-ஆம் எண் நூலுக்குப் பதிலாக 40-ஆம் எண் நூலும், 72 இன்ச் அச்சுக்கு பதிலாக 68 இன்ச் அச்சுமாக மாற்றப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் தங்களது தறிகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 7 மாதங்கள் தாமதித்து இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டதன் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பிய ஆஸ்டின், பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டதால் தரமும் கூலியும் குறைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலைப்படுகின்றனர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தேக்கமடைந்துள்ள உற்பத்திப் பொருட்களை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்து, இந்த அரசாணையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்டின் வலியுறுத்தினார்.
இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கையில், மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம். பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மக்கள் 8 முழ வேஷ்டிக்கு பதிலாக 4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று விரிவாக பதில் அளித்தார்.