தமிழக செய்திகள்

கார்த்திகை தீப திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பஸ்களின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் வேலூர் பஸ் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு

இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ் சேவைகள் குறித்து, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பஸ்களின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் காட்பாடி, ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்களை ஏற்றி செல்லும் சிறப்பு பஸ்களின் இயக்கம், அவற்றின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தரவு

தொடர்ந்து, போக்குவரத்து கழக உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி, பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பஸ்களை உரிய கால அட்டவணைப்படி தடையின்றி இயக்கவும், பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாகவும், தரமாகவும் ஏற்படுத்தி தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT