தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் மாண்புமிகு வெற்றி தளபதியுடைய தலைமையில் தமிழகம் சிறப்பான முறையில் எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு அயரால் உழைத்து வருகிறார்கள். அவரை பொறுத்தவரையும் விவசாயிகள் மீது வைத்திருக்கிற பேரன்பு அளப்பெரியதாக இருக்கிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்திலே தஞ்சையிலே பேசுகையில், அடுத்து எனக்கு ஒரு ஜென்மம் இருக்குமேயானால் நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த அடிப்படையில் தங்களுடைய காளைகளை காங்கியம் என்று சொல்லப்படுகிற உயர்தர காளைகளை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்து பரிசுகளை பெறுவதற்காக விவசாயிகள் இங்கே பெருந்திரளாக வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பாக, இங்கே வருகை தந்திருக்கிற அனைவர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய பகுதியிலே வாழுகிற மக்கள் காங்கியம் காளை, காங்கியம் கரை மாடுகள் என்று சொன்னால் உயர்தரமான காளை மாடுகள் என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் மருத்துவ குணம் பெறுவதற்கு இங்கே இருக்கிற நம் பசுவின் பாலை தான் அருந்த வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். காங்கியம் பசுமாட்டின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என்பதை பல்வேறு புள்ளி விவரங்களை மருத்துவர் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எல்லா விவசாயிகளும் எல்லா நலமும் பெற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதனிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்கும்போது தமிழ்நாட்டிலயும் அதே மாதிரி அனைத்து கட்சிகளும் இருக்கணும். அதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டணும்னு அரசியல் கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் என்று செய்தியாளர் கூறியதற்கு, பொதுவாக எல்லோரும் ஒருங்கிணைந்து தான் அந்த பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதிலே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஒரு மாநிலத்திலே அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்று உதாரணம் காட்டி எங்களிடத்திலே கேள்வி கேட்பதை காட்டிலும் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தமிழ்நாட்டினுடைய நம்முடைய தமிழ் மக்களுக்காக தஞ்சைதரனிலேயே இருக்கின்ற காவிரி டெல்டா பகுதியில் வாழுகிற விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்த கனவு நிறைவேறுகிற காலம் துவங்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது வெற்றிக்கரமாக நடைபெற நல்ல ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் காலம் என்றைக்கும் பொற்காலமாக அமையும் என்றார்.
மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டேங்குறார் என்று செய்தியாளர் கூற, அவர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. ஆகவே தான் வாய் திறப்பதில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.