அமைச்சர் ரமேஷ் 
தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்- அமைச்சர் ரமேஷ்

தி.மு.க.வினர் பொதுவெளியில் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா சொல்லி கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

திருச்சியில் பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், தி.மு.க.வினர் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் மக்கள் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், நில மோசடி வழக்கில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும் என உறுதியளித்தார்.

திருச்சியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தகுந்த பாடம்

இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமோ, நிலையோ த.வெ.க.விற்கு இல்லை.

தி.மு.க.வினர் பொதுவெளியில் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா சொல்லி கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த தொகுதி மக்கள் பாடம் புகட்டியது போல, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

நடவடிக்கை தொடரும்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த புகாரில், தி.மு.க. பகுதி செயலாளர் ராம்குமார் போலீசாரால் பஞ்சப்பூர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

"நிலத்தை விலைக்கு வாங்கிய தி.மு.க. நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை அவருக்கு முறைகேடாக விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியும் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு, இந்த நில மோசடி வழக்கில் சட்டப்படி படிப்படியாக அனைத்து நடவடிக்கைகளும் தொடரும், என்றார்.

"இந்திய தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணியினர் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா?" என்ற கேள்விக்கு, இதுகுறித்து த.வெ.க. தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் முறைப்படி அறிவிப்பார்" என பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT