தமிழக செய்திகள்

வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:-

ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.

ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.

ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.