அமைச்சர் ராஜீவ்
தமிழக செய்திகள்

அவர் சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஆதங்கம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜீவ் பதில்

மாசுக்கட்டுப்பாட்டை குறைக்க க்ரீன் பட்டாசு தயாரிக்க ஊக்கப்படுத்தப்படும்.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி பட்டாசு வெடிப்பால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.5 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. பட்டாசு கழிவுகள் விரைவாக அகற்றப்பட்டுள்ளது. க்ரீன் பட்டாசு தயாரிக்க ஊக்கப்படுத்தப்படும். இதனால் 30 சதவீத மாசு கட்டுப்பாடு தடுக்கப்படும்.

467 தொழிற்சாலைகளை த.வெ.க. அரசு மூடிவிட்டது. இதனால் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒரு கட்சித் தலைவர் (எடப்பாடி பழனிசாமி) குற்றம்சாட்டியிருந்தார். அப்படியெல்லாம் கிடையாது. சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஆலைகள் மீதுதான் அதிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை மூடியது ஏன்?

அவர் மாவட்டத்தை சேர்ந்த ஆலைகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஏன் கோப்படுகிறார் என்றால், அவர் சார்ந்த தொழிற்சாலைகள். அவரை மாதிரி செயலற்ற அரசு மாதிரி த.வெ.க. அரசு கிடையாது. அவருடைய ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் அப்படியெல்லாம் இருக்க முடியாது. மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற மாதிரியான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 95 ஆலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறைகேடு என கண்டுபிடிக்கப்பட்டால் நோட்டீஸ் வழங்கப்படும். அதை அவர்கள் சரி செய்து விட்டால் நடவடிக்கை திரும்பப்பெறப்படும். புதிதாக தொழில் தொடங்க மே 10-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் வரை 52-க்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். நிறுவனங்கள் ஓபன் செய்ய CTO 2237-க்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறோம்.

6495 ஒப்புதல் இந்த குறுகிய காலத்தில் எந்தவித லஞ்சம் ஊழல் இல்லாமல் தொய்வின்றி கொடுத்திருக்கிறோம். யாரும் வேலை வாய்ப்பு இழக்கவில்லை. அவருடைய ஆதங்கம் என்னவென்றால், அவர் சார்ந்த நிறுவனங்கள் ஒன்றிரண்டை மூடிவிட்டோம். அவருடைய நேரடிய முதலீடாக இருக்கலாம். அவருடைய உறவினர்கள் சார்ந்ததாக இருக்கலாம். அந்த ஆதங்கத்தில்தான் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக குறை கூறுகின்றார்.

அவர் சார்ந்தவர்கள் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பாரபட்சம் இன்று நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் ராஜீவ் பேசினார்.

SCROLL FOR NEXT