எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு பின்னடைவு இல்லை என்றும், அ.தி.மு.க. நிலைமையால் தான் ராஜினாமாக்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் ஈகோ அ.தி.மு.க.வை சீர்குலைத்து தி.மு.க.வுக்கு பலன் அளிக்கிறது என குற்றம்சாட்டி, மக்கள் ஆதரவு உள்ளவர்களுடன் தான் பயணம் தொடருவோம் என்றார்.
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்து தான் வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்து வைத்திருந்தனர். தற்போது ஓட்டை பிரிப்பதற்காக தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.
இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அ.தி.மு.க. கட்சியின் நிலை காரணமாகவே அவர்கள் ராஜினாமா செய்தனர். எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக தி.மு.க.வை ஆதரிப்போம் என்று சொன்னால் யார் ஏற்றுக்கொள்வர்?. மக்கள் ஆதரவளித்தவர்கள் உடன் சேர்ந்து பயணிப்போம் என முடிவெடுத்து ராஜினாமா செய்ததில் எந்த தவறும் இல்லை.
அ.தி.மு.க.வை சீர்குலைத்து, தி.மு.க.வுக்கு முட்டு கொடுகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் செல்லும் முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் யாரும் ராஜினாமா செய்திருக்கமாட்டார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் என் தலையீடு இல்லை. கோவில் குடமுழுக்கில் பி.டி.ஆர்.குடும்பம் புறக்கணிக்கப்படவில்லை. பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணியை நன்றாக தான் கவனித்துக்கொண்டோம். கோவிலைக் கட்டிய பாண்டிய மன்னனை விட பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதிகமாக பேசுகிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பி.டி.ஆர். டிரஸ்ட் தொடர்புடைய திருமண மண்டபத்தை 3 ஆண்டாக முடக்கி வைத்திருந்தார். பழனிவேல் தியாகராஜன் முடக்கிய மண்டபத்தை திறந்து வைக்க நான் உதவியதால் என் மீது அவருக்கு ஈகோ.
தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பம் ரூ.30,000 கோடி ஊழல் என பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது. நிதியமைச்சராக செயல்பட்டிருந்தால் தி.மு.க. ஆட்சியில் பி.டி.ஆர். ஏன் ஒதுக்கப்பட்டார்? ஆடியோ டெஸ்டுக்கு அவர் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.