அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சட்டத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை ஏற்பட்டது பராமரிப்பு பணிகளுக்காக நடந்தது என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டபோது தகவல் பரிமாற்றக் குறைபாடு காரணமாக தடை ஏற்பட்டது. அனைத்து குறைகளும் விரைவில் சரிசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர் மீனாட்சி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வந்தது. பின்பு எடப்பாடி பழனிசாமி சுந்தரேசுவரரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது நிருபர்களிடம் கூறுகையில், மீனாட்சியை தரிசனம் செய்து கொண்டிருந்தபோதே மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடி யாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்து கோவில் மின்சார பிரிவு அலுவலர்களிடம் கேட்டபோது. துணை ஜனாதிபதி நாளை (இன்று) மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அதனால் கோவிலில் பழுதடைந்த மின்விசிறி மற்றும் மின்ஒயர்களை மாற்றுவதற்காக மின்சாரத்தை தடை செய்து வேலை பார்த்தோம். சில நிமிடத்திலேயே மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.

இதனிடையே, இந்த மின்தடை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பேசுபொருளாக மாறியது.

குறைகளை சரிசெய்யும் பணிகள்

இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தேவர் சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மின்தடை ஏற்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்க அவர் கூறியதாவது:-

முக்கிய பிரமுகர்கள் வருகையை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நேற்று ஜெனரேட்டர் மூலம்கோவிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி வந்தபோது ஏற்பட்ட மின்தடை, ஜெனரேட்டர் இயக்குவது தொடர்பான தகவல் பரிமாற்றக் குறைபாட்டால் நிகழ்ந்தது.

சட்டத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்துக் குறைகளும் சரிசெய்யப்படும் என்றார்.

SCROLL FOR NEXT