தமிழக செய்திகள்

‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் இடங்களில் அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறோம்.

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆகிய வற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் மனு சந்தானம் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

மின் துறையில் ஒப்பந்த பணியாளர்கள் அவர்களது ஒப்பந்ததாரர்கள் மூலமாக சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் யார்-யார் எந்தெந்த ஒப்பந்ததாரர்களிடம் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சரியாக சம்பளம் செல்கிறதா? என்று சரி பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின்படி மின்சார துறையில் முறைகேடு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் வந்துள்ளது. அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் மீட்டர்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் இடங்களில் அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறோம். ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால்தான் நிரந்தர தீர்வு கொடுக்க முடியும். அதற்கு சில காலம் ஆகும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியில் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

தயாராகவில்லை

குறைந்தது 15 ஆண்டுகள் நீடிக்கும் வரையில் ஸ்மார்ட் மீட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்த முடியுமா? என்று பார்க்க வேண்டும். அதற்கு தொழில்நுட்ப ரீதியாக நாம் இன்னும் தயாராகவில்லை. அதை ஆய்வு செய்த பிறகுதான் முடிவு செய்ய முடியும். இந்த வருடம் 15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறோம். அதுபோக 5 ஆயிரம் பழைய ஹேங்மேன்களை வேலைக்கு எடுக்கிறோம். 6 மாதத்துக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். அதுவரை ஒப்பந்த ஊழியர்கள் மூலம் மின் பாதிப்புகள் சரி செய்யப்படும். டி.என்.பி.எஸ்.சி. மூலமாகத்தான் ஆட்களை வேலைக்கு எடுப்போம் என்றார்.