தமிழக செய்திகள்

வைகை அணையில் வண்டல் மண் லாப நோக்கில் அள்ளினால் நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்

வைகை அணை தென் தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

தேனி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக எரிசக்தி, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தேனி மாவட்டத்திற்கு முதன்முறையாக ஆய்வு பணிகள் மேற்கொள்ள வருகை தந்தார். அவருக்கு மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வைகை அணையில் அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு பணி மேற்கொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடிநீர்தட்டுப்பாடு

மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டம் முழுவதும் போதுமான மழை பெய்யாததாலும், வைகை அணையில் இருந்து விவசாயம் மற்றும் பாசனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 20 அடியாக சரிந்தது. இதனால் வைகை அணையில் இருந்து செயல்படுத்தப்பட்ட அனைத்து கூட்டு குடிநீர் திட்டங்களும் அடியோடு நிறுத்தப்பட்டது.

இதனால் வைகை அணையை நம்பி உள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீரின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வைகை அணை கட்டப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தூர்வாரப்படாததால், அதில் பெருமளவு மணல் மற்றும் வண்டல் மண் படிந்துள்ளன. இதனால் அணையின் நீர் கொள்ளளவு 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தூர்வார நடவடிக்கை

இந்த நிலையில் வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க வைகை அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து உள்ளது. வைகை அணை தென் தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. அணைப்பகுதிகளில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண் திட்டுகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற 2 நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இன்னும் 2 மாதங்களுக்குள் வைகை அணையை தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.

நடவடிக்கை

மேலும் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதனை வணிக ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ யாராவது கடத்த முயன்றால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் ஆண்டிபட்டி பகுதியில் நிலுவையில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் புறவழிச்சாலை திட்டங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் விதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்றுப் பாதைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்குத் தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.