முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தை வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் மரியவில்சன் பதில் அளித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் அமைச்சர் மரியவில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* அண்ணாமலை ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன், அவர் முதலமைச்சர் லண்டன் பயணத்தை விமர்சிப்பது நல்லதல்ல.
* முதலீடு ஈர்க்கும் முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தை கிண்டல் கேலி செய்வது நல்லதல்ல.
* சிறிய முதலீடுகளை கூட விட்டுவிட முடியாது.
* தமிழ்நாட்டில் வெளிப்படையான தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது.
* தமிழகத்தில் ஊழல் இல்லாமல் வரி வசூலிக்கப்படுகிறது.
* ஐபிஎஸ்ஸாக இருந்த அண்ணாமலையிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வது பழைய காலத்து அரசியல். உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். இங்கு நிறைய தொழிலதிபர்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
உள்ளூர் தொழிலதிபர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். பிரிட்டனின் வளர்ச்சி சதவீதமே மிக குறைவானதுதான். அவர்கள் எப்படி இங்கு முதலீடு செய்வார்கள். லண்டனில் இந்திய நிறுவனங்களே அதிக முதலீடு செய்கின்றன. முதலீடுகளை ஈர்க்க மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்று அண்ணாமலை விமர்சித்து இருந்த நிலையில் தற்போது அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார்.