தமிழக செய்திகள்

இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்ட வேண்டும்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, திருத்தங்கள் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்.

தமிழகத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய வாக்காளர்களை கண்டறிந்து, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

வாக்காளர் சிறப்பு திருத்தம்

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பூத் நிர்வாகிகள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியை முன்னிட்டு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பி.எல்.ஏ. நிர்வாகிகள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து, வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, திருத்தங்கள் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடைபெறும் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகக் கண்காணித்து, நிர்வாகிகளுக்கு உரிய பொறுப்புகளைப் பிரித்து வழங்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 11.12.2026.

விண்ணப்பங்கள் பரிசீலனை நிறைவு:28.12.2026.

இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியீடு:4.1.2027.

இந்த பணியை அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி, வாக்குச்சாவடி அளவிலான கட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தினசரி வாக்காளர் பட்டியலில் புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்களோ, அவர்கள் அனைவரின் விண்ணப்பப் படிவங்களையும் புகைப்படம் எடுத்து, அனைத்துப் படிவங்களையும் ஒரே பி.டி.எப். கோப்பாக தொகுத்து, கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள இணைப்பில் தினசரி தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் படிவங்கள் அனைத்தும் விடுபடாமல் பதிவேற்றம் செய்யப்படுவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT