தற்காலிக செவிலியர்களை நிரந்தரம் செய்ய 2,500 பணியிடங்களுக்கு அரசாணை 2 வாரங்களில் வெளியிடப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் பெட் ஸ்கேன் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீதிமன்றத்தில் உள்ள தடையாணை காரணமாக செவிலியர் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனை சட்டரீதியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
சென்னையில் நான்கரை ஆண்டுகளுக்கு பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரின்பேரில், மருத்துவ கல்வி இயக்ககத்தில் விசாரணை நடத்தப்பட்டு முதற்கட்டமாக உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மருத்துவர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படாததால் மாவட்டங்களுக்கு இடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய, தேவைக்கு அதிகமாக உள்ள இடங்களில் இருந்து மருத்துவர்கள் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் நியமிக்கப்படுவர்.
குமரி மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படாமல் வளாகத்திற்குள்ளேயே குழிதோண்டி புதைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து தேவைக்கேற்ப பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. பாபு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நாளுக்குநாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.
தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையின்படி முதற்கட்டமாக 2,500 செவிலியர்களை நிரந்தரம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.