தமிழ்வழி மாணவர்கள், சமூக & பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் முறைகேட்டால் உயிரிழப்பும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சொல்லொணா துயரமும் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானத்தை கொண்டு வந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில்,
* ஒரு மாணவர் 12 ஆண்டாக பள்ளியில் கற்ற கல்வியை விட ஒரு நாள் நடக்கும் தேர்வு அவரது திறமையை மதிப்பிடக்கூடாது.
* தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட கல்வியை அளித்த மாநிலம். பல துறைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக உள்ளது.
* இதன்மூலம் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இயலும்.
* முறைகேடுகளை கருத்தில் கொண்டு நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
* நீட் ரத்து தொடர்பாக உள்ள சட்டங்களில் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* ஒரு மனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவர் இசைவு தெரிவிக்கவில்லை.
* வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் 2026 நீட் இளநிலைத் தேர்வு ரத்தாகி மறுதேர்வு நடத்தப்பட்டது.
* கடும் உழைப்பில் தேர்வெழுதிய மாணவர்கள் சொல்லொணா துயரம், சிலரை உயிரை மாய்த்தப் பரிதாபம்.
* நீட் அமலுக்கு வந்த பின்னர் அடிப்படை சமநிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.
* தமிழ்வழி மாணவர்கள், சமூக & பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது.
* வரம்பின்றி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகவே நீட் வழி வகுக்கிறது.
* மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து திசைத்திருப்புகிறது நீட் தேர்வு.
* மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு அகற்றப்பட வேண்டும்.
* நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
* மாநில அரசின் கருத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றார்.
மேலும் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.