முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் மாநில மரமான பனையை பாதுகாக்கவும், நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி’களை இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், நாட்டு நலப்பணித் திட்டம், என்.டி.எஸ்.ஓ. மற்றும் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி.மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் பனை விதைகளை நடவு செய்து, தமிழ்நாடு முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி’யை தொடங்கி வைத்தார். நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்துதல், அரசு காலியிடங்களில் பனை விதைகளை நடுதல், கடற்கரை மண் அரிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், பனை சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், பனை சார்ந்த தொழில்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நீலகிரி மாவட்டம் நீங்கலாக 37 மாவட்டங்களில் ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று, மொத்தம் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யும் வகையில் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 100 கல்லூரிகளில் பனை விதை வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட பனை விதைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளின் கரைகள் உள்ளிட்ட பொருத்தமான இடங்களில் நடவு செய்யப்பட உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா, கூடுதல் கலெக்டர் ஆஷிக் அலி, சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. தினகரன் இ.கா.ப அவர்கள், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர்பாரி, எக்ஸ்னோரா பொதுச்செயலாளர் மோகனகிருஷ்ணன், என்.எஸ்.எஸ். மாநில அலுவலர் குணாநிதி, கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, என்.டி.எஸ்.ஓ. நிறுவனர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், எனெஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.