தமிழக செய்திகள்

தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்

சிறுபாலங்கள் உள்ளிட்ட வெள்ளநீர் வெளியேற்றும் வழிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மழைக்காலங்களில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி வெற்றித் தமிழகம், தொலைநோக்கு ஆவணம்: செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல் மண்டல மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது.

அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கூடுதல் இயக்குனர் ஆனந்த் ராஜ், ஆணையர் அமுதவல்லி, மேலாண்மை இயக்குனர் ஆர்த்தி மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து கூடுதல் இயக்குனர்கள், சப்-கலெக்டர்கள், திட்ட இயக்குனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியா ளர்கள் உள்பட சுமார் 1,000 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுபோன்ற மாநாடு முதல்முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

அமைச்சர் ஆனந்த்

இந்த மாநாட்டில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:-

தமிழக அரசு, முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையில் ‘வெற்றித் தமிழகம்’ என்ற வளர்ச்சி திட்டத்தை உருவாக்கியுள்ளது. அந்த தொலைநோக்கு இலக்குகளை அடையும் வகையில், நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஊரக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய்

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் குறித்த காலத்தில் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

கிராமங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகளை சரியான முறையில் கண்டறிந்து அந்தந்த ஊராட்சிகளுக்கான முழுமையான திட்டத்தினை உருவாக்கிட வேண்டும்.

தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்காக பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையை நம்பியுள்ளதால் அக்காலத்தில் பெய்யும் மழையை சேமிக்க தற்போது நடைபெற்று வரும் புதிய குளங்கள் அமைத்தல், பாரம்பரிய நீர் நிலைகளை தூர்வாருதல் மற்றும் பாசன கால்வாய்களின் புனரமைப்பு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களின் செயல்பாடுகள் மிகவும் அத்தியாவசியமானதாகும். ஊராட்சி செயலர் மற்றும் பணியாளர்கள் அவரவர் பகுதிகளில் பருவமழை காலங்களில் உள்ள நிலவரம் குறித்து உடனுக்குடன் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

சிறுபாலங்கள் உள்ளிட்ட வெள்ளநீர் வெளியேற்றும் வழிகளை சுத்தம் செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார்கள் மற்றும் ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் மற்றும் காற்றினால் மரம் விழுந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த மின் ரம்பங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

சுத்தம் செய்ய வேண்டும்

மழைக்காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது மிகமிக முக்கிய பணியாகும், அனைத்து நீர்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு போதுமான அளவு குளோரின் கலக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணியும் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும்.

புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதுடன் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உணவு தயாரிப்பதற்கு தேவையான முன்னேற்பாடு வசதிகள் உறுதி செய்யப்படவேண்டும். புகார்கள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை சீரமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டெங்கு தடுப்பு

மழைக்காலங்களில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

நீர் தேக்கம், பயன்பாடற்ற பொருட்களில் மழைநீர் தேங்குதல் மற்றும் கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட கொசு உற்பத்தியாகும் பகுதிகளை ஊராட்சி வாரியாக கண்டறிந்து உடனடியாக அகற்ற கடும் நடவடிக்கை வேண்டும்.

கொசு ஒழிப்பு

நோய் தொற்று தொடர்பாக அதிக புகார்கள் வரும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து தீவிர கொசு ஒழிப்பு, தூய்மை மற்றும் மருந்து தெளிப்பு மேற்கொள்ளுதல் வேண்டும்.

பிளீச்சிங் பவுடர், கொசு ஒழிப்பு மருந்துகள் மற்றும் இதர சுகாதாரப் பொருட்கள் தேவையான அளவில் ஊராட்சிகளில் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

முறிந்து விழுந்த அல்லது ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரங்களை அகற்ற வேண்டும். பக்க கால்வாய்கள் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளில் உள்ள வண்டல் மண், குப்பைகள், அடைப்புகள் ஆகியவற்றை சுத்தம் செய்து மழைநீர் தடையின்றி ஓடுவதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர்

ஊரகப் பகுதிகளில் எவ்வித தடங்கலுமின்றி தினசரி குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் வேண்டும். கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு தேவையான 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் குடிநீர் வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோரி வரும் பொதுமக்களின் மனுக்களுக்கு வட்டார அளவிலேயே உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு மனுவுக்கும் முறையான ஒப்புகை வழங்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் தரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

வெளிப்படையான நிர்வாகம்

வட்டார மற்றும் கிராம ஊராட்சி அளவில், நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒளிவுமறைவு இல்லாமல் டெண்டர் விடப்பட வேண்டும். டெண்டர் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் கிராமங்களின் வளர்ச்சியிலேயே அடங்கி உள்ளது. அந்த கிராமங்களின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முதன்மை சிற்பிகள் நீங்கள். உங்கள் பணி சிறக்கட்டும் தமிழ்நாடு வளரட்டும்.

இவ்வாறு அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.

SCROLL FOR NEXT