தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்
நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:-
நமது தாய்மொழியை விட்டுவிட்டால் அது நமது தாயை விட்டு விட்டு செல்வதற்கு சமம். ஒரு குழந்தை தமிழ்நாட்டில் பிறந்தாலே, தமிழை முதலில் படிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் முதலில் தங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து வர வேண்டும். தமிழ்மொழிதான் நம்மை பாதுகாக்கிறது. தமிழால்தான் நாம் பயன் அடைகிறோம்.
நாம் இன்று அமைச்சர் ஆனதற்கு காரணம் தமிழ் மொழி. இந்த உணர்வு அனைத்து இடத்திலும் இருக்க வேண்டும். மேடையில் பேசுவது பெரிய விஷயம் இல்லை. எந்த சட்டத்தை கொண்டு வர வேண்டுமோ. அதை கொண்டு வர வேண்டும்.
நமக்கான கொடியை உருவாக்க வேண்டும். எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலத்துக்கு என்று கொடி இருக்கிறது. நமது மாநிலத்துக்கு தமிழை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்க வேண்டும். அதை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18-ந்தேதி நமது முதல்-அமைச்சர் கையால் முதல் முறையாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்ற வேண்டும்.
தேசியக்கொடிக்கு சமமாக தமிழின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழ்நாட்டுக்காக உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். உணவு, உடை போல தமிழ் மொழியை நமது அடிப்படை தேவையில் கொண்டு வர வேண்டும். இந்த உணர்வுடன் பள்ளிக் கூடங்கள் மாற்றப்பட வேண்டும். அதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும்.
ஜூலை 18-ந்தேதியைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிலர் விமர்சிப்பார்கள். சிலர் நவம்பர் 1-ந்தேதியைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விமர்சிப்பார்கள். நவம்பர் 1-ந்தேதி போராட்டங்கள் மூலம் நமது எல்லை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை இல்லாமல் ஜூலை 18 இல்லை.
உண்மையான வரலாறு என்ன?. அந்த வரலாறுனால்தான் நவம்பர் 1-ந்தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகிறோம். ஜூலை 18-ந்தேதியையும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாட வேண்டும். இந்த புரிதலை உருவாக்குவதற்கான அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. 75 வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள், 50 வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் இதை செய்யவில்லை. இன்னைக்குக் கூட இதை விமர்சிக்க வேண்டும் என்று விமர்சித்து கொண்டு இருப்பார்கள்.
நவம்பர் 1-ந்தேதியும் விடுமுறை கொடுக்க வேண்டும். ஜூலை 18-ந்தேதியும் விடுமுறை கொடுக்க வேண்டும். இந்திய அரசு சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் விடுமுறை கொடுப்பது போல் தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி மற்றும் ஜூலை 18-ந்தேதி விடுமுறை கொடுக்க வேண்டும்.
நவம்பர் 1 மொழிப்போர் தியாகிகள் தங்களது உயிரை கொடுத்ததற்காக. ஜூலை 18 அண்ணாவின் தீர்மானம். முதலில் `அ' போட்டார்கள். அதன்பின் அண்ணா முடித்து வைத்தார். அதில் இருந்து முதலமைச்சர் விஜய் வரலாற்றை திருத்தியிருக்கிறார். மற்றவர்கள் வரலாற்றை மறைக்க பார்த்தார்கள். இரண்டு நாட்களையும் கொண்டாடும் புதிய தமிழ்நாடா என்று மாறியிருக்கு.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.