தமிழக செய்திகள்

எம்எல்ஏ பல்லவியை மேயர் அவமானப்படுத்தி விட்டார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை.

சென்னை ஆர்.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

* உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்தை ஜெயித்து காட்டுங்கள்.

* உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.

* சென்னையில் திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்காது.

* தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை.

* அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

* எம்எல்ஏ பல்லவியை சென்னை மேயர் அவமானப்படுத்தி விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சென்னை திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ள உருது நடுநிலைப்பள்ளிக் கட்டிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவையொட்டி மேயர் பிரியா மெழுகுவர்த்தி கொண்டு முதலில் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து. அவர் அருகில் நின்ற எம்.எல்.ஏ. பல்லவி மேயர் பிரியாவிடம் இருந்து மெழுகுவர்த்தியை வாங்க முயன்றார். ஆனால், அவர் எம்.எல்.ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியைத் தராமல் அங்கிருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் வலுக்கட்டாயமாக கொடுத்தார். இதையடுத்து பல்லவி விழாவை புறக்கணித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.

த.வெ.க. எம்.எல்.ஏ.வை மேயருக்கு அடுத்ததாக, விளக்கேற்ற மெழுகுவர்த்தியை தராதது குறித்து அக்கட்சியின் பிரமுகர்கள் அதிருப்தியடைந்து கோபத்துடன் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. மேயர் உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் த.வெ.க. எம்.எல்.ஏ.வை புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதனைதொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், அதே மண்டலத்தில் நம்மாழ்வார்பேட்டை பகுதியில் கட்டப்பட்ட தொடக்கப் பள்ளியின் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது. குத்துவிளக்கு ஏற்றிய மேயர் பிரியா, அருகில் இருந்த எம்.எல்.ஏ. பல்லவியிடம் தானே முன்வந்து மெழுகுவர்த்தியை கொடுத்தார். ஆனால், பல்லவி மேயர் பிரியாவிடம் இருந்து மெழுகுவர்த்தியை வாங்க மறுத்து, அவரை திரும்பி கூட பார்க்காமல் நின்றார். அப்போது, அங்கிருந்த த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கை தட்டி, விசில் அடித்து கோஷமிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி, விவாத பொருளானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அடுத்தடுத்து நடந்த பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா-த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி இடையே ஏற்பட்ட இந்த உரசல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. பொதுவான அரசு நிகழ்ச்சியில் இப்படி தங்கள் அதிகாரத்தை காட்டலாமா? என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.