அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 
தமிழக செய்திகள்

செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்து இல்லை: மறுசீரமைப்பு செய்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இந்தியாவிலேயே முதல்முறையாக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், முதலமைச்சர் புதிய விளையாட்டுக் கொள்கையை எவ்வாறு வகுத்து வருகிறார் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதே கிடையாது. இதற்காக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பாக 38 மாவட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும்

மேலும், உலகத் தரத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் நிலையில் அரசு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தனக்கு இருந்த விளையாட்டுத் துறை அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது, ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய அமைச்சர், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

மேலும், உலகத் தரத்திற்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 8.1.2026 அன்று கோரப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்புதான் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான பணிகளை ஆறு மாதங்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது” என்றார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.

கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சர் அவர்களின் கைகளால் ஒலிம்பிக் தரத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.