தமிழக செய்திகள்

‘போராட்டம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்’ - தெருக்குரல் அறிவு!

நீட் மட்டுமல்ல புதிய கல்விக்கொள்கையும் ரத்து செய்யப்பட வேண்டும்.

நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (23 ஜூலை ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன், நடிகை ஆண்ட்ரியா, ஜேம்ஸ் வசந்தன், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், நடிகர் கலையரசன், பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தெருக்குரல் அறிவு.,

“நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் நீட்டுக்கு எதிரானது அல்ல. இங்கு அடிப்படை கல்வியிலேயே பிரச்சனை உள்ளது.

ஒருவருக்குள் இருக்கும் திறமை வளர்த்தெடுக்கும் கல்வி அமைப்பு இங்கு இல்லை. இதனால்தான் மாணவர்களுக்கு பாடத்தை, ஆசிரியர்களை, தேர்வை பார்த்து பயம், குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்குத்தான் பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகின்றனர்.

ஒரு பிள்ளைக்கு முள் குத்தினாலே ஒரு தாயால் தாங்கமுடியாது. ஒரு பிள்ளை தற்கொலை செய்துகொள்வதை எவ்வாறு ஒரு தாய் தாங்கிக்கொள்வாள்? எத்தனைக் குழந்தைகளை, எத்தனை மாணவர்களை நாம் நீட்டால் இழந்திருப்போம்? முதல் குழந்தை சாகும்போதே இதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று இந்தநிலை வந்திருக்காது.

சமூகமே சமமாக இல்லை. சமமாக இல்லாத சமூகத்தில் எல்லோருக்கும் எப்படி சமமான தேர்வு இருக்கும்? இந்த அரசு மாணவர்கள்மீது வன்முறையை ஏவி காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தில் நான் இறங்கினேன்.

அரியலூரைச் சேர்ந்த அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு இப்போதுவரை நம்மிடத்தில் பதில் இல்லை. இது அனிதாவிற்கான போராட்டம். இதற்கு தீர்வு காணும் வரை யாரும் இதில் இருந்து பின்வாங்கக்கூடாது. அரசிடம் முறையிடுவதன் மூலம் இது நடைபெறாத ஒன்று என எனக்கு எப்போதோ தெரிந்துவிட்டது.

இந்தியா முழுவதும் போராடும் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் போராட்டம் வெல்லவேண்டும். இவர்கள்தான் நமது எதிர்காலம். நீட் மட்டுமல்ல புதியக் கல்விக்கொள்கையையும் நாம் ரத்துசெய்ய வேண்டும்.

இன்று சாதிக்கு பதில் தேர்வு என்ற பெயரை வைக்கின்றனர். நான் அன்று தலைமைச் செயலகத்தின் முன்பு போராடியதால் என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் அன்று முதலமைச்சரை சந்திக்கவில்லை, அமைச்சர் ஆதவ்வைத்தான் சந்தித்தேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும்.

நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் இறங்குகிறீர்கள்? இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் என்றுக்கூறி அனுப்பினார்கள். முதலமைச்சரை சந்திப்பால்தான் மட்டும் இந்த பிரச்னை தீர்ந்துவிடாது. இது மக்கள் கையில் எடுக்கவேண்டிய போராட்டம். நாம் அம்பேத்கரின் பேரப்பிள்ளைகள். நமது குரல் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒலிக்கவேண்டும். எனது குரல் ஒலிக்கும்.” என தெரிவித்தார்.