அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அணைகள் நிரம்பும் தருவாயில் இருந்ததால் அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியை தாண்டியதால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டநிலையில் பின்னர் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.36 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 677 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இன்றுடன் 45 நாட்கள் ஆகிறது. எனவே இன்றுடன் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுமா? அல்லது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் அணை கட்டியபோது மூழ்கிய புராதன சின்னங்கள் தற்போது வெளியே தெரிய தொடங்கியது. அதன்படி பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கியிருந்த நந்தி சிலை தற்போது முழுவதுமாக வெளியே தெரிகிறது. இதனால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தெரியும் நந்திசிலையை போட்டோ எடுத்து ரசித்து வருகிறார்கள்.