தமிழக செய்திகள்

மேட்டுப்பாளையம்-கோவை இடையே 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் விரைவில் இயக்கம்

8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகள் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

சேலம் ரெயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மேட்டுப்பாளையம்-கோவை இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

மெமு ரெயில்

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, இந்த சேவையை 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயிலாக மாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரெயில்வே நிர்வாகம்

இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கோவைக்கு 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் அறிமுகம் செய்து அடுத்த வாரம் 10 அல்லது 12-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

8 ரெயில் பெட்டிகள்

அதே நேரத்தில், 12 பெட்டிகள் கொண்ட மெமு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகள் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திண்டுக்கல்

கோவை மண்டலத்தில் ஏற்கனவே மெமு ரெயில் பெட்டிகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கோவையில் இருந்து சேலம் மற்றும் கோவையிலிருந்து திண்டுக்கல் வரை மெமு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ரெயில் சேவை

அதே சமயம், கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை மெமு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். எனவே, தற்போது பயன்பாட்டில் உள்ள 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகளை சென்னைக்கு திருப்பி அனுப்பாமல், அவற்றை கோவையிலேயே தக்கவைத்து, கோவையில் இருந்து பொள்ளாச்சி அல்லது பழனி அல்லது திண்டுக்கல் அல்லது சேலம் ஆகிய வழித்தடங்களில் புதிய மெமு ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

இதன்மூலம் தினமும் பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள். எங்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து, சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.