கூரியரில் வந்த பட்டு சேலைகளை படத்தில் காணலாம். 
தமிழக செய்திகள்

திருடப்பட்ட பட்டுச்சேலைகள் கூரியரில் வந்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்த வியாபாரி

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் 4 பெண்கள் உள்பட 6 பேர் வந்தனர்.

ஆரணி அருகே திருடப்பட்ட 32 பட்டுச்சேலைகள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் வியாபாரி இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவற்றை திருடியவர்களே இதனை அனுப்பி வைத்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுச்சேலை வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். பட்டு சேலை வியாபாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் 4 பெண்கள் உள்பட 6 பேர் வந்தனர். அவர்கள் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளை பார்த்துவிட்டு குமாரிடம் குறைந்த விலையில் சில பட்டு சேலைகளை வாங்கிச் சென்றனர்.

அதன் பிறகு 2 நாள் கழித்து அந்த கடையில் வியாபாரி பார்த்தபோது விலை உயர்ந்த பட்டு சேலைகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்தபோது காரில் வந்ததாக கூறப்படும் பெண்கள் பட்டு சேலைகளை திருடிச் சென்றதை அறிந்தார்.

வலைவீச்சு

அது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தர்ம லிங்கம், சின்னப்பன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து பெண்கள் உள்பட மர்மநபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

தொலைக்காட்சிகளிலும், தினசரி நாளிதழ்களிலும் செய்தி வெளியானதை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடப்பட்டதாக கூறப்படும் 32 பட்டு சேலைகளை கூரியர் தபால் மூலம் வியாபாரி குமாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஏதோ பார்சல் வந்துள்ளது என அதனை பிரித்த வியாபாரி குமார், தனது கடையில் திருடப்பட்ட பட்டுச்சேலைகள் கூரியரில் வந்துள்ளதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பரபரப்பு

இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் கூரியல் எங்கிருந்து வந்தது யார் அனுப்பியது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடியவர்களே போலீசுக்கு பயந்து கூரியரில் அனுப்பி வைத்திருக்கலாம் என கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT