தமிழ்நாடு செய்திகள்

இரும்பு வியாபாரி கொலை- குடிபோதை தகராறில் நண்பர் வெறிச்செயல்

நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

Suresh K Jangir

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி மேலத்தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

இவரும், நவ்வலடி நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (46) என்பவரும் நண்பர்கள். இவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

நேற்று இரவு இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது முத்து, செல்வகுமாரின் மனைவி குறித்து பேசி உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் கையில் இருந்த கத்தியால் முத்துவை கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

தகவல் அறிந்த உவரி போலீசார் அங்கு விரைந்து சென்று முத்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது மனைவி குறித்து பேசியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.