பி.ஆர்.பாண்டியன் 
தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: டி.கே.சிவக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் காட்டம்

தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளைக் கொண்ட குழுவை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நீர் நிர்வாகம் இருக்கும்போது, மத்திய நீர்வள ஆணைய அதிகாரி பாட்டன்கர் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மேகதாது பகுதியைப் பார்வையிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஓசூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதி மன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ தலையிட முடியாது.

மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் வசிக்கும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும், 22 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சட்டத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார். தனது அரசியல் சுயலாபத்திற்காக மேகதாது அணை விவகாரத்தைப் பயன்படுத்துகிறார். உச்சநீதி மன்றத் தீர்ப்பை தவறாகப் பயன்படுத்தி, பிரதமர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலேயே சட்டவிரோதமான கருத்துகளைத் தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே, அவர் மீது தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

காவிரி நீர்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவைதான் நீர் நிர்வாகத்தைக் கண்காணித்து வருகின்றன. கர்நாடகம் சட்டத்தை மீறினால் உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நீர் நிர்வாகம் இருக்கும்போது, மத்திய நீர்வள ஆணைய அதிகாரி பாட்டன்கர் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மேகதாது பகுதியைப் பார்வையிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு

எனவே, தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளைக் கொண்ட குழுவை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வமான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT