மேகமலை விவகாரம் 
தமிழக செய்திகள்

மேகமலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம்

காவல்துறை ஒத்துழைக்காவிடில் ராணுவப்படையை வைத்து மக்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிர்ச்சி அளிக்கிறது.

மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது என்றார்.

இதனை தொடர்ந்து சட்டசபையில், மேகமலை விவகாரம் தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது.

அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி

மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றம் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றார்.

சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி

மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில், வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது. வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர். எந்தவித கருத்து கேட்காமல் காப்புக்காடாக அறிவித்து வனத்துறை கட்டுப்பாடுகளை விதிப்பதால் பழங்குடி மக்கள் அவதி அடைந்துள்ளனர். சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது என கூறினார்.

சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்

காவல்துறை ஒத்துழைக்காவிடில் ராணுவப்படையை வைத்து மக்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை. கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார்.

தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா

மேகமலை- வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம் என்றார்.