தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடியில் மெகா VinFast விரிவாக்கம்: இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்க முடிவு!

"இந்த மெகா முதலீடு தமிழ்நாட்டை ஆசியாவின் முதன்மை 'மின்சார வாகன உற்பத்தி மையமாக' மாற்றுவதற்கான இலக்கிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது."

வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனமான விஃன்பாஸ்ட், தூத்துக்குடியில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் ரூ.7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், வெறும் கார்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த ஆலை, இனி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சாரப் பேருந்துகளையும் தயாரிக்கும் ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த உற்பத்தி மையமாக மாறவுள்ளது.

தூத்துக்குடி துறைமுக நகரில் அமைந்துள்ள தனது 408 ஏக்கர் உற்பத்தி வளாகத்தில், இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இந்நிறுவனம் கோரியுள்ளது. இதுவரை மின்சார கார்களை மட்டுமே தயாரிப்பதற்கான ஆலையாக இருந்த வின்பாஸ்ட் இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் கார்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பஸ்களைத் தயாரிக்கும் மாபெரும் மையமாக மாறவுள்ளது.

இதன் மூலம் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் என்ற அளவிற்கு உயர்த்தப்படவுள்ளது. ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.1,200 கோடி முதலீட்டில் 50,000 கார்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலை இயங்கி வரும் நிலையில், ஓராண்டிற்குள்ளாகவே இந்த அடுத்தகட்ட மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான இ-பஸ்களின் தேவை கணிசமாக உயர்ந்து வருவதை அறுவடை செய்ய விஃன்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு, ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் EV சந்தை:

இந்தியாவில் மின்சார வாகனப் புரட்சி என்பது இருசக்கர வாகனங்கள் மூலமாகவே அடிமட்டத்திலிருந்து வேகமெடுத்து வருகிறது. மொத்த EV விற்பனையில் பாதிக்கும் மேல் இருசக்கர வாகனங்களே பிடிக்கின்றன. இதனை மனதில் கொண்டே விஃன்பாஸ்ட் தனது இ-ஸ்கூட்டர் தயாரிப்பைத் தொடங்குகிறது.

அரசுத் திட்டங்கள்:

மத்திய அரசின் FAME-II திட்டம் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் கொள்கைகளுக்கு இணங்க இந்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த மெகா முதலீடு தமிழ்நாட்டை ஆசியாவின் முதன்மை 'மின்சார வாகன உற்பத்தி மையமாக' மாற்றுவதற்கான இலக்கிற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.