மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் நிர்மல் குமார் கும்பாபிஷேகம் குறித்த தகவல்களை அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவரும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேசம் சீரும் சிறப்புமாக நடைபெறும் இந்நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி அனைவரும் முறையாக தெரிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசின் தலையிட்டுடன் கூடிய தற்போதைய கோவில் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது.
அனுமதி அட்டைகள் பொறுத்தவரையில் 9 ஆயிரம், 11 ஆயிரம் என தினமும் ஒரு தகவல் வெளி வருகிறது. மிகவும் மதிக்கத்தக்க வகையில் நன்கொடைதாரர்கள், உபயதாரர்களுக்கு அழைப்புகள் சென்று சேர்ந்துள்ளதா? என்பது எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
யார் பெயருடம் விட்டுவிடக்கூடாது என்பதற்கான நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம். அதை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.
17-ந்தேதி நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ருக்மணி பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.