தமிழக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய்

நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நேபாளம் மற்றும் அதை ஒட்டிய சீனா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக போடே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்பு

நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அவர்களின் தற்போதைய நிலவரத்தைப் பெற்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வரத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய் பதிவு

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், "நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாகவும் சிக்கியுள்ளதாகவும் வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல்களைப் பெறவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்புகொள்ளவும் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பச் செய்யத் தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.