தருமபுரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் 2-வது நாள் மாட்டுப் பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவையொட்டி தருமபுரி பகுதியிலுள்ள அனைத்து விவசாய தோட்டங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி விவசாயிகள் தங்கள் வளர்த்துவரும் மாடுகள், எருமை உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் அந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
மாட்டுப்பொங்கல் நாளன்று வழக்கமாக ஊர் பொதுவில் உள்ள கோவில் முன்பு விவசாயிகள் அனைவரும் தாங்கள் வளர்த்துவரும் கால்நடைகளை அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.
ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிராமப் புறங்களில் மாட்டுப் பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. விவசாயிகள் தனித்தனியாக தங்களது கால்நடைகளை அழைத்து வந்து அந்தந்த கோவில்களில் பூஜை செய்து அழைத்துச் சென்றனர்.
தருமபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் மாட்டுப் பொங்கல் நாளில் விவசாயிகள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களை திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மாடுகளை ஒன்றுசேர்த்து வழிபாடு நடத்துவதை ஊர் முக்கியஸ்தர்கள் தவிர்த்தனர்.
கால்நடை வளர்ப்பவர்கள் காலம் காலமாக தொன்று தொட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது என்பதால் தனித்தனியாக தங்கள் கால்நடைகளை கோவில் முன்பு நிறுத்தி வழிபாடு செய்து அழைத்துச் சென்றனர்.
வழக்கமாக நூற்றுக்கணக்கான மாடுகளுடன் நடைபெறும் இந்த வழிபாடு சமூக இடைவெளியோடு தனித்தனியாக நடைபெற்றது. மாடுகள் வழிபாடு நிகழ்ச்சியை காண ஏராளமானோர் சாலைகளில் காத்திருந்து ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.