காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சிந்தபல்லி டேவிட் ராஜூ, கணித சமன்பாடுகளை பயன்படுத்தி மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்து புதிய முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பரவளையங்கள், வட்டங்கள் மற்றும் பிற இயற்கணித வளைவுகளை அவற்றின் எல்லைகளுக்குள் முறையாக ஒருங்கிணைத்து, காந்தியின் தலை, காதுகள் மற்றும் உடலின் வெளிப்புற அமைப்புகளை வரைந்துள்ளார். இந்த வரைபடம் மகாத்மா காந்தி பின்னால் இருந்து நடப்பது போன்ற தோற்றத்தை தருகிறது.
செயற்கை நுண்ணறிவு படம் உருவாக்கும் கருவிகள் வருவதற்கு முன்பே, 2012ம் ஆண்டிலேயே தனது கணித கலை பயணத்தை தொடங்கிய இவர், கணிதம் வெறும் எண்கள், கணக்கீடுகள் மற்றும் சூத்திரங்களுடன் முடிந்து விடுவதில்லை என்றும், அது கலையின் வடிவமாகவும் காட்சி படைப்பாற்றலாகவும் பயன்படும் என்பதை நிரூபிக்கவே இதை செய்துள்ளார்.
மாணவர்கள் கணிதத்தை கலை மொழியாக பார்க்க வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இவரது கணித கலை படைப்புகள் ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தெலுங்கு புக் ஆப் ரெக் கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
இதற்கு முன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் விநாயகர் ஆகியோரின் உருவங்களையும் கணித சமன்பாடுகள் மூலம் வரைந்துள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த டேவிட் ராஜூ, ஜெர்மனியில் நடைபெற்ற 2024 உலக மனக்கணக்கு போட்டியில் பங்கேற்றவர் என்பதோடு சர்வதேச மனக்கணக்கு போட்டிகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
பை வரிசையில் இடம் பிடித்த இவர், 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் லயன்ஸ் கிளப் சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். மேலும், 2017ம் ஆண்டில் ரோட்டரி கிளப்பின் நேஷனல் பில்டர் விருதையும் பெற்றுள்ளார். 2012ல் தொடங்கப்பட்ட இவரது கணித கலை முயற்சி, கணிதத்தின் காட்சி மற்றும் பயன்பாட்டு பரிமாணங்களை வெளிப்படுத்தி, மாணவர்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்கி வருகிறது.