பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் 'ஜனநாயகம் காப்போம்' என்ற தலைப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை எழும்பூரில் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் தேர்தல் ஜனநாயகப் படுகொலையை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாளை (15.10.2026) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை எழும்பூர், லாங்ஸ் தோட்ட சாலை, ரமடா சர்க்கிள் அருகில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் எம்.வீரபாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசைதம்பி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை கண்டித்துத் தான், தலைநகர் டெல்லியில் அனைத்து எதிர்கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற்றது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிற நோக்கத்தில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அனைத்து கட்சி பேரணி உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையிடுவதற்காக நடத்தப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதி அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து விட்டார். இத்தகைய நிகழ்வுக்கு பிறகு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக மக்கள் மன்றத்தில் இப்பிரச்சனையை கொண்டு செல்கின்ற முயற்சியில் தான் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எந்த சூழ்நிலையிலும் வாக்களிக்காத, சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் வாக்குகளை, பெருமளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே பா.ஜ.க. அரசின் நோக்கம். அதற்காகவே சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை கொண்டு வந்தனர்.
கடந்த ஏப்ரலில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற, தமிழ்நாடு, கேரளம் புதுச்சேரியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எந்த ஒரு புகாரோ, குற்றச்சாட்டுகளோ இல்லை. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு அடித்தளம் இல்லாததால் அவர்களால் எவ்வித மோசடி வேலைகளையும் செய்ய முடியவில்லை.
ஆனால், அசாமில் பாஜக ஆட்சி நடப்பதால் அங்கு ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரில் சிறுபான்மையினர் வாக்குகளை பெருமளவில் நீக்கிவிட்டனர். மேற்கு வங்கத்தில் அப்போது ஆண்ட மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை செயல்படுத்த மறுத்தது. ஆனாலும் வலுக்கட்டாயமாக மத்திய படைகள் உதவியுடன், நீதிமன்ற தீர்ப்பு என்று கூறி சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பல லட்சம் வாக்குகளை நீக்கினர். அதற்கு ‘பங்களாதேஷில் இருந்து ஊடுருவி வந்தவர்கள்’ என்று காரணத்தைக் கூறி சமாளித்து வந்தனர். ஆனால் இப்போது உண்மை அம்பலமாகி விட்டது.
சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் 13.3 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பாக இந்தியாவில் 95 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்தது. தற்போது, 81.8 கோடி வாக்காளர்களாக சிறப்பு தீவிர திருத்தத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 14 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் தாக்கல் செய்த மனுவில் உடனடியாக சிறப்பு தீவிர திருத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் வாக்குத் திருட்டை நடைமுறைப்படுத்தி பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை போன தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிற வரை போராடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை எழும்பூரில் நடைபெறுகிற இந்தியா கூட்டணி கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்பதோடு, கட்சி எல்லைகளைக் கடந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் பிடியிலிருந்து விடுவிக்கவும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்ப அணி திரண்டு வரும்படி அன்போடு வேண்டுகிறேன்.